மதுரையில் ஜேசிபி வாகனத்தால் மோதி 10+ வாகனங்களை சேதப்படுத்திய சிறுவன் கைது!

மதுரையில் ஜேசிபி வாகனத்தால் மோதி 10+ வாகனங்களை சேதப்படுத்திய சிறுவன் கைது!

மதுரை: மதுரையில் நள்ளிரவில் ஜேசிபி வாகனத்தை எடுத்துச் சென்ற 17 வயது சிறுவன், சாலையோரத்தில் நின்றிருந்த கார், ஆட்டோ உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அச்சிறுவனை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை செல்லூர் 50 அடி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவர் அப்பகுதியிலுள்ள ஜேசிபி உரிமையாளரிடம் கிளீனராக பணிபுரிந்து வந்தார். அச்சிறுவனுக்கு தினமும் ஜேசிபி உரிமையாளர் ரூ.100 செலவுக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில், நேற்று நள்ளிரவில் அந்த சிறுவன் ஜேசிபி வாகனத்தை எடுத்து ஒட்டியுள்ளார்.

செல்லூர் – குலமங்கலம் பிரதான சாலையில் ஜேசிபியை ஓட்டிச் சென்ற அந்த சிறுவன், செல்லூர் 50 அடி சாலையில் இருந்து கண்மாய்கரை சாலை வரையிலும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையோரத்திலும், வீடுகளுக்கு முன்பாகவும் அந்த பகுதியில் நிறுத்தியிருந்த இருந்த கார், ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோக்கள், டூவீலர்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி சேப்படுத்தியுள்ளார்.

மேலும், அப்பகுதியில் இரும்பு கடை ஒன்றில் தூங்கி கொண்டிருந்த காவலாளி மீதும் ஜேசிபி வாகனத்தை மோதியுள்ளார். நல்வாய்ப்பாக அங்கு பணியில் இருந்த காவலாளி தப்பியதால் அவரது கட்டில் உடைந்து நொறுக்கியது. தொடர்ந்து வீட்டு வாசல்களில் இருந்த கிரில் கேட், மின் கம்பங்கள் மீதும் ஜேசிபியை சிறுவன் மோதியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்லூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனார். இதைத் தொடர்ந்து ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுவனை பிடித்தனர். அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில், அச்சிறுவன் நேற்று இரவு பெற்றோரிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அவர்கள் தர மறுத்த ஆத்திரத்தில் அப்பகுதியில் நின்ற ஜேசிபி வாகனத்தை எடுத்துச் சென்று சாலையோரம், வீடுகளுக்கு முன்பாக நிறுத்தியிருந்த தலா 3 கார், ஆட்டோ, டூவீலர்கள் என, 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் மின் கம்பம் , வீட்டின் இரும்பு கதவு மீது மோதி சேதப்படுத்தியது தெரிய வந்துள்ளது.

மேலும் குடிபோதையில் சிறுவன் இச்சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இது தொடர்பாக செல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். பின்னர், மதுரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான சிசிடிவி பதிவுகள், சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *