க.பாலகுரு,
மாவட்ட செய்தியாளர்,
திருவாரூர் மாவட்டம்.

நீலக்குடியில் மத்திய பல்கலைக்கழகத்தில்
மகளிர் தினம் மருத்துவ முகாம்..
திருவாரூர் மார்ச்,16-
திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. மேலும், பெண்களுக்காக பிரத்யேகமாக சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு. கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், திருவாரூர் மாவட்ட,
முதன்மை மாவட்ட நீதிபதி திருமதி. பி. செல்வ முத்துக்குமாரி எம்.எல். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பல்கலைக்கழகத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர் பரிசு வழங்கி பாராட்டினார்.
குறிப்பாக, புது தில்லியில் நடந்த தேசிய மாணவர் படையின் சிறப்பு முகாமில் கலந்து கொண்ட ஜிஸ்னா டி.கே., அனைத்திந்திய தல் சைனிக் கேம்பில் கேடட் பட்டம் வாங்கிய அக்ஷயா, இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் மூலமாக ரூ.1.5 கோடி ஆய்வு நிதியாக பெற்ற பேராசிரியர் விஜயலட்சுமி மற்றும் பேராசிரியர் விசாலட்சுமி, சங்கீதத்துறைக்கு பெரும்பங்காற்றிய பேராசிரியர் பிரேமலதா, நாட்டிய கலையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தும் திருமிகு வடிவழகி, பல்கலைக்கழக மருத்துவர் விஷ்ணுபிரியா மற்றும் பல்கலைக்கழக அலுவலர் சாந்தி ஆகியோர் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விழாவில், பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் இரா. திருமுருகன், தேர்வு கட்டுப்பாட்டாளர் பேராசிரியர். சுலோச்சனா சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்கலைக்கழக மருத்துவமனையில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமில், மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக அலுவலர்கள் மட்டுமின்றி, பல்வேறு கிராமப்புற பெண்களும் கலந்து கொண்டனர். சிறப்பு மருத்துவ முகாமில், பல்கலைக்கழக மருத்துவர்களுடன், சிறப்பு மருத்துவர்கள் ஆர். புவனேஸ்வரி மற்றும் நஸ்ரின் பாத்திமா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்கள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாமை, பேராசிரியர் ரவிக்குமார், பேராசிரியர் சுந்தர வடிவு மற்றும் பல்கலைக்கழக மருத்துவர்கள் விஷ்ணு பிரியா, பிரேம் டேவிஸ் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

