கடலூர் மாவட்டம் கொத்தட்டை சுங்கச்சாவடியில் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கடலூர் – சிதம்பரம் வழித்தடத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கடலுார்-சிதம்பரம் வழித்தடத்தில் உள்ள கொத்தட்டை சுங்கச்சாவடியில் 50 முறை பேருந்து சென்று வர 14 அயிரத்து 90 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் பிற சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் தொகையை விட அதிகம் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் குற்றம் சாட்டினர்.
கொத்தட்டை சுங்கச்சாவடி திறக்கப்படும் நாளான இன்று கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என தனியார் பேருந்துகள் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் அறிவித்தனர். அதன்படி, கடலூர் – சிதம்பரம் வழித்தடத்தில் 39 தனியார் பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.