செய்தி முன்னோட்டம்
“மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் யார் என்பது குறித்து பிரதமர் மோடி முடிவு செய்வார். அவரது முடிவுக்கு கட்டுப்படுவோம்,” என மஹாராஷ்ட்ராவியின் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி பெரும் வெற்றியை பெற்று ஆட்சி அமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்து வருகிறது.
தற்போது, ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளார். ஆனால் பாஜகவை சேர்ந்த தேவேந்திர ஃபட்நாவிஸ் பெயரை பரிந்துரைக்க சில கோரிக்கைகளும் எழுந்தன.
இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் ஒன்று கூடி பேசியும் ஒருமித்த கருத்து எட்டப்படாத நிலையில் ஷிண்டேவின் இந்த பதில் வந்துள்ளது.
ஷிண்டே உரை
நிருபர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே
“பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்தனர். அவர்களுக்கு என் நன்றி. இருவருடனும் தொலைபேசியில் பேசினேன். அந்த உரையாடலில், மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் நான் தடையாக இருக்க மாட்டேன் என்று உறுதி அளித்தேன்”.
“மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் பிரதமர் மோடி எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம். தே.ஜ. கூட்டணி தலைவர் என்ற முறையில் அவர் முடிவு எடுக்குமாறு நான் பிரதமரிடம் கேட்டேன். அவர் எங்கள் குடும்பத்தின் தலைவர். அவர் எடுக்கும் முடிவை பா.ஜ.க.வினர் ஏற்றுக் கொள்வது போல், நாங்களும் ஏற்றுக் கொள்வோம். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கூட்டணி முடிவு செய்யும் முதல்வருக்கு முழு ஆதரவு அளிப்போம்,” என்று ஷிண்டே நிருபர்களிடம் கூறினார்.