
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மாலிப்பட்டு ஊராட்சி குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானைகள் அருகே உள்ள விளைநிலங்களுக்கு சென்று அங்குள்ள பயிர்களை சேதப்படுத்தியது விவசாயிகள் வேதனை அடைந்தனர் மூன்று யானைகள் வரும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பு
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த மாலிப்பட்டு ஊராட்சி பகுதியில் வனப்பகுதியையொட்டி ஏராளமான விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளது.
இப்பகுதியில் சுமார் 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக 3 காட்டு யானைகள் அவ்வப்போது திடீரென முகாமிட்டு அங்குள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இதே போல் நேற்று முன்தினம் நள்ளிரவு மீண்டும் யானைகள் பிளிறியபடி குடியிருப்பு அருகே உள்ள விளைநிலங்களுக்கு வந்துள்ளது.
அங்கு பயிரிடப்பட்டிருந்த நெல் ,கரும்பு , கேழ்வரகு, வாழைமரம், மாமரம் உள்ளிட்ட பயிர்களை மிதித்து சேதப்படுத்தியது.
இதைக்கண்டு வேதனையடைந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தெரிவித்தனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘கடந்த ஒரு வாரமாக யானைகள் ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வருகிறது.
குறிப்பாக விளை நிலங்களில் உள்ள பயிர்களை மிதித்து சேதப்படுத்தி வருகிறது.
இதனால் இரவில் வெளியேவர அச்சமாக உள்ளது. அதிகாலையில் விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே யானைகள் மீண்டும் அட்டகாசம் செய்யாமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தற்பொழுது மூன்று யானைகள் வரும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.