கோவை வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள தொழிலதிபர் சாந்தியாகு மார்ட்டினின் வீடு, அலுவலகங்கள் மற்றும் ஹோமியோபதி கல்லூரி உள்ளிட்ட மூன்று இடங்களில் கடந்த வாரம் இரண்டு நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் பாதுகாப்பில் நடைபெற்றது.
சோதனையின் தொடர்ச்சியாக, மார்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ஆதவ் அர்ஜுனா விசிகவின் துணைப் பொதுச் செயலாளராக செயல்பட்டுவருவதால், இந்த நடவடிக்கை அரசியல் விவாதத்தையும் உருவாக்கியது.
இந்நிலையில், தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா, உத்தரபிரதேசம், மேகாலயா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 22 இடங்களில் சாந்தியாகு மார்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனைகள் மேற்கொண்டது. இதில், ரூ. 12.41 கோடி பணம் மற்றும் பல்வேறு குற்ற ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. மேலும், வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 6.42 கோடி பணமும் முடக்கப்பட்டது.
சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பணக் கட்டுகளின் புகைப்படங்களை அமலாக்கத்துறை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. வெளியிடப்பட்ட அறிக்கையில், “சாந்தியாகு மார்டினுக்கும் அவரது நிறுவனமான ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல்சும் தொடர்பான சோதனைகள் PMLA, 2002 விதிகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. சோதனை நடவடிக்கையின் போது கணக்கில் வராத பணம், குற்ற ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என குறிப்பிட்டுள்ளது.
