ரயில் பெட்டிகள் தயாரிப்பு : இந்தியாவை நாடும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

ரயில் பெட்டிகள் தயாரிப்பு : இந்தியாவை நாடும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

ரஷ்யா தனது வளர்ந்து வரும் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்காக ரயில்கள் மற்றும் அவற்றின் உதிரிபாகங்களை உற்பத்தி செய்ய இந்தியாவில் முதலீடு செய்ய ரஷ்யா முடிவெடுத்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியாவும், ரஷ்யாவும் 70 ஆண்டுகளாக நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. தொலைத்தொடர்பு, ஆட்டோமொபைல், தொழில்துறை சேவைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் மருத்துவ அறுவை சிகிச்சை உபகரணங்கள் போன்ற பல்வேறு துறைகளில் ரஷ்யா இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றன.

காமன் வெல்த் ஆப் இண்டிபெண்டெண்ட் ஸ்டேட்ஸ் எனப்படும் (CIS) சிஐஎஸ் பிராந்தியத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக உறவுள்ள நாடாக ரஷ்யா உள்ளது. உலகளவில் இந்தியாவுடன் வர்த்தக உறவு வைத்திருக்கும் 5வது பெரிய நாடாக ரஷ்யா உள்ளது. இந்தியாவில் அந்நிய முதலீடுகளில் ரஷ்யா 29 வது இடத்தில உள்ளது.

2000 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர இரு தரப்பு உச்சி மாநாட்டில் இரு நாட்டு தலைவர்களும் சந்திக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக இந்திய- ரஷ்ய உறவு வலிமை பெற்றுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவும் ரஷ்யாவும் இருதரப்பு வர்த்தக இலக்கை 30 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், இருதரப்பு முதலீட்டு இலக்கை 50 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் நிர்ணயித்துள்ளன.

2023 ஏப்ரல் முதல் 2024 மார்ச் வரை ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இரு தரப்பு வர்த்தகம் இது வரை இல்லாத அளவில் 66 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

உக்ரைன் மீது படையெடுத்து 36 மாதங்களுக்கும் மேலான நிலையில், ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ளன. குறைந்த விலைக்கு ரஷ்யாவில் இருந்து இந்தியா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது .

இந்த சூழலில், நாட்டின் வளர்ந்து வரும் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்கு இந்தியாவில் முதலீடு செய்ய ரஷ்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் ரயில் மற்றும் உதிரிபாக உற்பத்தியில் முதலீடு செய்ய ரஷ்யா முடிவெடுத்துள்ளது.

இந்தியாவில் முதலீடு செய்வதற்கான முக்கிய மூன்று காரணங்களை ரஷ்ய நிறுவனமான டி.எம்.ஹெச் (TMH) தலைமை நிர்வாக அதிகாரி கிரில் லிபா தெரிவித்திருக்கிறார்.

மற்ற நாடுகளைப் பார்க்கும் போது இந்தியாவின் வட்டி விகிதம் பொருத்தமானதாக இருப்பதால் இந்தியாவில் முதலீடு செய்யவும் தயாராகஇருப்பதாக தெரிவித்த லிபா, ஏற்கெனவே இந்தியாவுடன் பல விநியோக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். ரஷ்யா மீதான பொருளாதார தடை எந்த வகையிலும், இந்தியாவுடன் வர்த்தக உறவை பாதிக்காது என்றும் லிபா தெளிவு படுத்தி இருக்கிறார்.

ஏற்கெனவே, 1,920 வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகளைத் தயாரிப்பதற்கும், அவற்றை 35 ஆண்டுகள் பராமரிப்பதற்கும் 55,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் ரஷ்யாவின் கைனெட் ரயில்வே சொல்யூஷன்ஸ் கையெழுத்திட்டுள்ளது. இந்த கைனெட் ரயில்வே சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் டி.எம்.ஹெச் (TMH) ஒரு பங்குதாரர் என்பது குறிப்பிடத் தக்கது.

ரஷ்யாவிற்கு பெரிய உள்நாட்டு தேவைகள் உள்ளன அதற்காக இந்தியாவில் உற்பத்தி வசதிகளை அமைக்க விரும்புகிறது. இது இந்தியாவுக்கு லாபம் தான் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.


source

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *