
மயிலாடுதுறை நகராட்சி உட்பட்ட வாடுகளில் மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை கண்டித்து மயிலாடுதுறையில் நூதன போராட்டம், வீட்டு வாசலில் தமிழ் வாழ்க, இந்தியை திணிக்காதே என்ற வாசகங்களுடன் கோலம் வரைந்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மத்திய அரசின் கல்விக் கொள்கையில், மும்மொழி பாடத்திட்டத்தை தமிழக அரசு ஏற்காத காரணத்தால் தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்க முடியாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இது தற்பொழுது தமிழ்நாட்டில் பேசு பொருளாகி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
மத்திய அரசு ஹிந்தி மொழியை திணிப்பதாக தெரிவித்து தினசரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி மயிலாடுதுறையில் கூரைநாடு பகுதியில் தனியூர் சாலிய தெரு,மாமரத்து மேடை,திருப்பூர் குமரன் தெரு,தச்ச தெரு, சின்ன மனவெளி தெரு, குமரக்கட்டளை தெரு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வீதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகளின் வாசலில் தமிழ் வாழ்க, ஹிந்தியை திணிக்காதே என்ற வாசகங்கள் அடங்கிய தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களில் வீட்டு வாசலில் கோலமிட்டு எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். வீடுகளில் போடப்பட்டுள்ள கோலங்களை மயிலாடுதுறை நகர் மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் சுதா முரளி, கிருத்திகா இளங்கோவன், சம்பத் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர். இந்த வினோத போராட்டம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.