இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 12 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சில் விளையாடிய இந்தியா 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 104 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்தியா 2-வது நாளில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் அடித்திருந்தது.
தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கேஎல் ராகுல் 62 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற 3-ம் நாள் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்கள் எடுத்த இந்திய அணி டிக்ளேர் செய்தது.
அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 161 ரன்களும், விராட் கோலி 100 ரன்களும் குவித்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 12 ரன்கள் எடுத்தது.