
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பசலிகுட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஆடி 18 திருவிழா இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெற உள்ளது. இதற்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதில் கோயிலுக்கு இடம் வாங்கிய நபரின் பெயர் மற்றும் பசலிகுட்டை, சென்றாய கவுண்டனூர், அனேரி, ராச்சமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஊர் கவுண்டர்கள், ஊராட்சி மன்ற தலைவர்களின் பெயர்கள் விடுபட்டு உள்ளது மேலும் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை என கூறி நேற்று பசுமை சோலை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ஏ.பி. சிவா, பொருளாளர் சிலம்பரசன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இளைஞர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் கிராமிய போலிசார் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை ஏற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.