“தேரு வருமோ…!”

“தேரு வருமோ…!”

தென்காசி காசிவிஸ்வநாதர் திருக்கோயில் பழுதடைந்த தேரை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம்

தென்காசி மார்ச்16
தென்காசி உலகம்மன் சமேத காசிவிஸ்வநாதர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ஏப்ரல் மாதம் 7ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிதிலமடைந்த அம்மன் தேருக்கு பதில் புதிய தேர் உருவாக்கப்பட்டு வெள்ளோட்டம் நடத்தப்படும் என்ற கோயில் நிர்வாகத்தின் வாக்குறுதி என்னவாயிற்று? என்று பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

வடக்கே அமைந்துள்ள இந்துகளின் புனித நகரமான காசிக்கு இணையான பெருமையையும், சிறப்புகளையும் கொண்டது தென்காசி.

இங்குள்ள காசி விஸ்வநாதர் கோவில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களை தன்பால் ஈர்த்து வருகிறது. சபரிமலை சீசன் காலங்களில் மட்டுமின்றி தமிழ் மாதப்பிறப்பு தோறும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் தென்காசி காசி விஸ்வநாதரை தரிசித்தே செல்கின்றனர்.

தென்காசி மாவட்டம் திருக்குற்றாலம் உட்பட ஏராளமான கோவில்களை கொண்டுள்ளதால் இது ஆன்மீக மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் பல பாகங்களில் இருந்து மட்டுமின்றி நாடு முழுவதிலிமிருந்து தென்காசி வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

17-ம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்ட பழம்பெருமை வாய்ந்த தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் மூலவர் காசி விஸ்வநாதர், உலகம்மன், முருகன் தனித்தனி சன்னதியில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

கடந்த 1984-ம் ஆண்டு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் தலைமையில் ராஜகோபுரம் கட்டுவதற்கு திருப்பணி குழு அமைக்கப்பட்டு 1990-ம் ஆண்டில் 180 அடி உயரத்தில் 9 நிலை அடுக்கில் கொண்ட மிகப்பெரிய ராஜகோபுரம் கட்டப்பட்டு மகா கும்பாபிஷேக விழாவும் நடைபெற்றது.

இந்த ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்தியதால் டாக்டர் பா.சிவந்தி அதித்தனாருக்கு இரண்டாம் பராக்கிரம பாண்டியன் என்று பட்டம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி 17 ஆண்டுகள் ஆவதால் கோவிலில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிேஷகத்திற்கு ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் 15 பணிகள் மேற்கொள்ளவும், கூடுதலாக ரூ.1.60 கோடி செலவில் ராஜகோபுர பணியும் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.

இதனையடுத்து பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. ராஜகோபுரத்தில் பழுதடைந்த சிற் பங்களை சீரமைத்தல், சுத்தம் செய்யும் பணி, வர்ணம் பூசுதல், கோயில் உள்பகுதியில் சகஸ்ர லிங்கம், பராசக்தி பீடம், சொக்கநாதர்-மீனாட்சி சன்னதி, காலபைரவர் சன்னதி, உலகம்பாள்சன் னதி, முருகன் சன்னதி, சுவாமி சன்னதியில் பரா மரிப்பு பணிகள் மும்மு ரமாக நடந்து வருகிறது.

சுவாமி, அம்பாள் சன்னதியில் புதிய கொடி மரங்கள் அமைக் கப்பட்டது. தொடர்ந்து யாக சாலை அமைப்பதற்காக கால் நாட்டபட்டது .

வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் பணிகள் சரிவர முடிவடையாததால் கும்பாபிஷேகத்தை தள்ளி வைக்கவேண்டும் என பக்தர் ஒருவர் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் பழுதான அம்மன் தேர் கும்பாபிஷேகத்தோடு புதுப்பிக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் உறுதி அளித்திருந்த நிலையில் புதிய தேர் உருவாக்கும் நடவடிக்கை மேற்க்கொள்ளப்படவில்லை என பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இக்கோவிலில் ஐப்பசி மற்றும் மாசி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றவை. இக்கோவிலில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு தனித்தனி தேர்கள் உள்ளன. திருவிழாவின் போது சுவாமி மற்றும் அம்பாள் தனித்தனி தேர்களில் வீதி உலா வருவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கொண்டாடப்படும்.

கடந்த 2023ம் ஆண்டு ஐப்பசி திருவிழா நடக்க இருந்த நிலையில் இந்த ஆண்டு தேரோட்டம் நடத்தப்படாது என கோவில் நிர்வாகம் அறிவித்தது. இதுகுறித்து கோவிலின் முகப்பிலும், தேரிலும் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் அம்பாளின் தேர் மிகவும் பழுத டைந்த நிலையில் உள்ளது.
ஸ்தபதி சுரேஷ் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தேரோட்டம் நடத்துவதற்கு தகுதி இல்லை என்று கருத்துரை வழங்கினார்.

எனவே புதிய தேர் செய்வதற்கு தொடர் நடவடிக்கையில் இருந்து வருகிறது. குடமுழுக்கு முன்பாக புதிய தேர் செய்து வெள்ளோட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். ஆகையால் இந்த வருடம் தேர் வடம் பிடித்தல் நடைபெறாது என்று குறிப்பிடபட்டிருந்தது.

ஆனால் பல்வேறு புனரமைப்பு பணிகள் நடந்தாலும் தேரை சீரமைக்க கோவில் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கும்பாபிஷேகத்தோடு அம்மனுக்கு புதிய தேர் செய்யப்பட்டு ரத உற்சவம் நடத்தப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *