
மதுரை: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை விதித்து, கோயிலில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் குறித்து சென்னை ஐஐடி குழு ஆய்வு செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஏப். 7-ல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. சமீபத்தில் கோயிலில் நூறு டிராக்டருக்கும் மேல் மண் அள்ளப்பட்டது. இதனால் கோயில் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் கோயில் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நிதி ஒதுக்கியது. இந்த நிதி முறையாக செலவிடப்படவில்லை.
அரசின் நிதியில் மோசடி செய்யப்பட்டதுடன், கோயிலின் ஸ்திரத்தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது. இது தொடர்பாக பக்தர்கள் அளித்த புகார்கள் விசாரிக்கப்பட்ட போது கோயில் பணிகளை முழுமையாக முடிக்காமல் அரசின் நிதியில் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோயில் ராஜகோபுரத்தில் பழுது சரி செய்யப்படாமலேயே வண்ணம் பூச்சு பணி நிறைவடைந்துள்ளது.

எனவே, கோயிலில் புனரமைப்பு பணிகள் முழுமையாக முடியும் வரை கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தடை விதித்தும், கோயில் புனரமைப்பு பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமித்தும், கோயில் புனரமைப்பு பணிக்கு அரசு வழங்கிய நிதியில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

