க.பாலகுரு,
மாவட்ட செய்தியாளர்,
திருவாரூர் மாவட்டம்.
பார்வையற்றோரின் இலக்கிய, பண்பாட்டு உலகைப் புரிந்துகொள்ளல் – ஒருநாள் கருத்தரங்கம்
திருவாரூர் பிப்,27-சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் -2024ஐ அனுசரிக்கும் விதத்தில் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் மாற்றுத்திறனாளர் பிரிவும் தமிழ்த்துறையும் இணைந்து 26.02.2025 (புதன்கிழமை) அன்று பார்வையற்றோரின் இலக்கியம் மற்றும் பண்பாட்டு உலகைப் புரிந்துகொள்ளல் எனும் தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கத்தை நடத்தியது. இக்கருத்தரங்கத்தில் பல்கலைக்கழகத்தின் கல்விப்புல முதன்மையர் பேராசிரியர் நாகராஜன் அவர்கள் தலைமையுரையாற்றினார். அவர் தனது உரையில், பல்கலைக்கழகம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குச் செய்துள்ள பல்வேறு வசதிகளைப் பட்டியலிட்டுக் கூறினார். மேலும் எப்போதும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பல்கலைக்கழகம் பல வசதிகளை துணைவேந்தரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் செய்துவருவதைக் குறிப்பிட்டார். அத்துடன், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கு அளித்துள்ளதையும் குறிப்பிட்டார். மாற்றுத்திறனாளர் படைப்புகள் பொதுவெளிக்கு பெருமளவு வருவதோடு மட்டுமல்லாமல் அவை குறித்த ஆய்வுகளும் பல்கலைக்கழகங்களில் நிகழவேண்டும் என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.
சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் முதன்மையர் பேராசிரியர் ச. இரவி மற்றும் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் இரமேஷ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர். சிறப்புப் பேச்சாளர்களாக கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லூரியின் ஆங்கிலத்துறைத்தலைவர் பேராசிரியர் முருகானந்தன் மற்றும் ஆத்தூர் அரசு கலைக்கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் முருகேசன் அவர்களும் கலந்துந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
பேராசிரியர் முருகானந்தன் அவர்கள் தனது உரையில், மாற்றுத்திறனாளிகள், குறிப்பாகப் பார்வையற்றவர்கள் இயல்பிலேயே சாதி, மதம், பாலினம், நிறம் போன்ற குறுகிய அடையாளத்தில் இருந்து வெளியேவந்து ஒரு சமூகமாகப் பயணிக்கின்றனர். அவர்கள் சமூகத்தின் கூட்டு அடையாளத்தைப் புரிந்துகொள்வதற்கு தன்னலமற்ற காதல், நட்பு, கவனிப்பு, ஒற்றுமை ஆகிய நான்கு கூறுகள் அடிப்படையானவை என்று குறிப்பிட்டார். இவற்றை மாற்றுத்திறனாளிகள் எழுதிய தன்வரலாற்று நூல்களில் இருந்து சான்றுகளுடன் விளக்கினார்.
பேராசிரியர் முருகேசன் தனது உரையில், பார்வைத்திறன் என்பது எவ்வாறு சமூகத்தின் எல்லாநிலைகளிலும் அதிகாரம் வாய்ந்ததாகத் தோற்றம் பெற்று பார்வையற்றவர்களை ஒடுக்குகிறது என்று குறிப்பிட்டார். மேலும் பார்வையற்றவர்களைக் குறைத்து மதிப்பிடல், அவர்களின் இருப்பை மறுத்தல், திறனற்றவர்களாகப் பார்த்தல் போன்ற சமூகத்தில் புரையோடியிருக்கும் பொதுமனப்பாங்கை மாணவர்கள் புரிந்துகொண்டு பார்வையற்றோரின் இலக்கியப் படைப்புகளைப் படித்துப் புரிந்துகொண்டு களைய வேண்டும் என்றார்.
இவ்விழாவில் முன்னதாக பல்கலைக்கழக மாற்றுத்திறனாளர் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பூபதி வரவேற்புரையாற்றினார். இறுதியாக, தமிழ்த்துறைப் பேராசிரியர் ஜவகர் நன்றியுரை வழங்கினார்.
இவ்விழாவில், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.