
மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள், சிவகங்கை பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளுக்கென மாநிலங்களவை உறுப்பினர் திரு.ப.சிதம்பரம் அவர்கள் மற்றும் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி ப சிதம்பரம் அவர்கள் ஆகியோர்களின்
தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் 2024-25 மூலம் தலா ரூ.01.00 கோடி வீதம் மொத்தம் ரூ.02.00 கோடி மதிப்பீட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் கீழ்
அடிக்கல் நாட்டும் பணியினை துவக்கி வைத்தார்.
மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள், சிவகங்கை பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளுக்கென மாநிலங்களவை உறுப்பினர் திரு.ப.சிதம்பரம் அவர்கள் மற்றும் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி ப சிதம்பரம் அவர்கள் ஆகியோர்களின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் 2024-25 மூலம், ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் கீழ் இன்று (26.02.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி ப சிதம்பரம் அவர்கள் முன்னிலையில் அடிக்கல் நாட்டும் பணியினை துவக்கி வைத்து தெரிவிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருவது மட்டுமன்றி, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் பொருட்டும், அதற்கான திட்டங்களை அறிவித்து பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்து வருகிறார்கள். அதில், அரசின் திட்டங்கள் வாயிலாக மட்டுமன்றி, மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழும், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழும் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் மேற்கண்டவாறு பல்வேறு நிதியின் கீழ், மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் எவ்வித பாகுபாடின்றி, பல்வேறு வளர்ச்சிப் பணிகள் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும், திட்ட செயல்பாடுகளை கண்காணித்து, பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்வது மட்டுமன்றி, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் எனது சார்பிலும், மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் சார்பிலும், காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் சார்பிலும் அடிப்படை மேம்பாட்டு பணிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில், சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கென மாநிலங்களவை உறுப்பினர் திரு.ப.சிதம்பரம் அவர்களின் சார்பிலும் மற்றும் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் சார்பிலும் பணிகள் மேற்கொள்ள, முன்னதாகவே கலந்துரைக்கப்பட்டு திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில், சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மேற்கண்டவாறு பல்வேறு வளர்ச்சி பணிகளும் அவர்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, இன்றையதினமும் சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட ராணி ஸ்ரீ ரெங்கநாச்சியார் பேருந்து நிலையத்தில் விரிவாக்கப் பணிகளுக்கென, பொருளாதார மேதையாக விளங்கி வரும் திரு.ப.சிதம்பரம் அவர்களின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.01.00 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.01.00 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.02.00 கோடி மதிப்பீட்டில் சிவகங்கை பேருந்து நிலைய விரிவாக்கப்பணிகள் இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்நிகழ்ச்சியின் வாயிலாக, சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நவீன மின் மயானம் வேண்டி கோரிக்கையும் வரப்பெற்றுள்ளது. அதனையும், மாநிலங்களவை உறுப்பினர் அவர்களின் சார்பில் மேற்கொள்ளப்படும் என சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது பாராட்டிற்குரியதாகும். இன்னும் கூடுதல் தேவைகள் இருப்பின்,
அதனையும் சிவகங்கைக்கு தங்களது நிதியின் கீழ் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இத்தருணத்தில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இதுபோன்று, மக்களின் தேவை அறிந்து மாவட்ட முழுவதும் எவ்வித பாகுபாடின்றி அனைத்து பகுதியும், மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசின் திட்டங்கள் பரவலாக அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசின் நோக்கமாகும்.
இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள சிவகங்கை பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளில், மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிவகங்கை-மதுரை செல்லும் பேருந்துகள் வழிதடத்தில் தினசரி சுமார் 3,000 பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பேருந்து நிலையத்தினுள் பயணிகளை ஏற்றிச் செல்லும் இடத்தில் மேற்கூரை அமைத்தல், பேருந்து ஓடுதளத்தில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைத்தல், நுழைவுவாயில் மற்றும் பெயர்பலகை அமைத்தல், மின் விளக்குகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிறுநீர் கழிப்பிடம், கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணிகளும், அதேபோன்று சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிவகங்கை – திருப்பத்தூர் செல்லும் பேருந்துகள் வழிதடத்தில் தினசரி சுமார் 2,500 பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பேருந்து நிலையத்தினுள் பயணிகளை ஏற்றிச் செல்லும் இடத்தில் மேற்கூரை அமைத்தல்,
பேருந்து ஓடுதளத்தில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைத்தல், நுழைவுவாயில் மற்றும் பெயர்பலகை அமைத்தல், மின் விளக்குகள், சுற்றுச்சுவர் அமைத்தல் மற்றும் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் ஆகியவைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.
இப்பணிகளை, குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து தரமான முறையில் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.மாங்குடி அவர்கள், சிவகங்கை நகர்மன்றத்தலைவர் திரு.சி.எம்.துரை ஆனந்த், சிவகங்கை நகராட்சி ஆணையாளர் திரு.கி.சு.கிருஷ்ணராம், சிவகங்கை நகர்மன்ற துணைத்தலைவர் திரு.எம்.கார்கண்ணன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் திரு.சேங்கைமாறன், 17-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் திரு.எம்.இராமநாதன், சிவகங்கை நகராட்சி பொறியாளர் திரு.முத்து உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

