
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளதை முன்னிட்டு, சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு அரசு பொது தேர்வினை முன்னிட்டு, சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், இன்று (03.03.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்,
தமிழகம் முழுவதும் இன்றையதினம் மேல்நிலை இரண்டாம் ஆண்டு அரசு பொதுத் தேர்வு சிறப்பாக தொடங்கியுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாமாண்டு அரசு பொது தேர்வினை 68 அரசுப்பள்ளிகள் உட்பட 162 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 7,234 மாணவர்களும், 8,829 மாணவியர்களும் என மொத்தம் 16,063 மாணவ, மாணவியர்கள், 83 தேர்வு மையங்களிலும், 174 பேர் தனித்தேர்வர்களாகவும் தேர்வு எழுதுகின்றனர்.
அதில் இன்றையதினம் நடைபெற்ற தேர்வில் 7,157 மாணவர்கள், 8,737 மாணவியர்களும் என மொத்தம் 15,894 மாணவ, மாணவியர்கள் வருகை புரிந்து தேர்வு எழுதியுள்ளனர். மேலும், 73 மாணவர்கள், 91 மாணவியர்களும் என மொத்தம் 164 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுத வருகை புரியவில்லை.
மேலும், மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்விற்கென, கண் குறைபாடு மற்றும் நரம்பியல் குறைபாடு உடைய 101 மாற்றுத்திறனாளித் தேர்வர்களில், 101 பேருக்கு சொல்வதை எழுதுபவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேல்நிலை தேர்வுப் பணிக்காக 08 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 83 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 83 துறை அலுவலர்கள், 1,396 அறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் 98 நிலையான படையினர், 24 வழித்தட அலுவலர்கள் ஆகியார் நியமனம் செய்யப்பட்டு, கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டவர்களிடம் ஒவ்வொரு மையத்திற்கும் காவல்துறையின் மூலம் சார்பு ஆய்வாளர் தலைமையில் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அனைத்து தேர்வு மையங்களிலும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், குடிநீர், கழிப்பறை, மின்சாரம் மற்றும் மின்விசிறிகள் வசதி ஆகியவைகள் ஏற்படுத்தப்பட்டு, முறையான கண்காணிப்புப் பணிகளும் நடைபெற்று வருகிறது. அரசு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவியர்கள் அச்சமின்றி தேர்வுகளை எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்று சிவகங்கை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.பாலுமுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.