சபரிமலையில் 9 நாட்களில் 6 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாகவும், 41 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாகவும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 15-ஆம் தேதி திறக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 9 நாட்களில் 6 லட்சத்து 12 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த், பக்தர்களின் இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும், காணிக்கை, அப்பம், அரவணை விற்பனை மூலம் 41 கோடியே 64 லட்சத்து 65 ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாகவும் கூறினார்.
மேலும், கடந்த ஆண்டை விட கூடுதலாக 13 கோடியே 13 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்ததாக கூறிய அவர், பம்பை, எருமேலி, வண்டிப்பெரியார் ஆகிய ஸ்பாட் புக்கிங் மையங்களில் பக்தர்கள் ஆதார் அட்டையை மட்டும் கொண்டு முன்பதிவு செய்து ஐயப்பனை தரிசிக்க வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.