தனது தந்தையின் பயிற்சியால் கேரம் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்திருக்கிறார் சென்னை புது வண்ணாரபேட்டையைச் சேர்ந்த 17 வயதான காஸிமா. உலக நாடுகளே வியக்கும் அளவிற்கான சாதனையை நிகழ்த்தியிருக்கும் காஸிமா குறித்தும், அவரின் விடா முயற்சி குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
சிறு வயதில் வீட்டின் சுவர், பீரோ கண்ணாடி, கதவு, ஜன்னல் என ஒவ்வொன்றிலும், எதிர்காலத்தில் நாம் என்னவாக போகிறோம் என்பதை எழுதி வைத்து, அதனை அடிக்கடி பார்த்து நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொண்டது அனைவருக்குமே நினைவிருக்கும்.
அப்படியாக முகம் பார்க்கும் கண்ணாடியில் I AM WORLD CHAMPION என எழுதிவைத்து, தன்னைத் தானே தினம் தினம் செதுக்கி ஊக்கப்படுத்தியதோடு அதனை நிஜமாக்கி சாதனை படைத்திருக்கிறார் சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வீராங்கனை காஸிமா..
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற 6 வது கேரம் போர்டு உலகக்கோப்பை தொடரில் தனி நபர் பிரிவு, இரட்டையர் பிரிவு, குழுப் பிரிவு என மூன்று பிரிவுகளிலும் தங்கப்பதக்கம் வென்ற காஸிமா ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை தேடி தந்திருக்கிறார்.
அதிலும் தனி நபர் பிரிவில் இறுதிப் போட்டியில் சக இந்தியரான 12 முறை தேசிய சாம்பியன் மற்றும் 3 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று ராஷ்மி குமாரியை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றுள்ளார் காஸிமா….
காஸிமா வெற்றி அவர் குடும்பத்தை சார்ந்தவர்களின் வெற்றி மட்டுமே அல்ல, அவர் வசித்து வரும் ஒட்டுமொத்த புது வண்ணாரப்பேட்டை செரியன் நகர் பகுதி மக்களின் வெற்றியாக அமைந்துள்ளது. காஸிமாவின் வெற்றியை செரியன் நகர் மக்கள் இரவோடு இரவாக கொண்டாடிய விதம், காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
7 வயது முதலே சென்னை புது வண்ணாரப்பேட்டை செரியன் நகரில் உள்ள கேரம் போர்டு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற காஸிமாவின் பயிற்சியாளர் அவருடையை தந்தை மஹபூப் பாஷா தான் என்பது தான் கூடுதல் தகல். காலையில் ஆட்டோ ஓட்டுநராகவும் மாலையில் கேரம் போர்டு பயிற்சியாளராகவும் காஸிமாவோடு சேர்த்து இதுவரை 14 தேசிய சாம்பியன்களை உருவாக்கியுள்ளார் மஹபூப் பாஷா
காஸிமா உலகக் கோப்பை வென்றதன் மூலம் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவிற்கும் பெருமையை தேடித் தந்திருக்கும் காஸிமாவின் வெற்றிப்பயணம் அடுத்துவரும் தலைமுறைகளுக்கு உத்வேகத்தை அளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.