
மயிலாடுதுறையில் தனியார் மண்டபத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் காவல் அலுவலர்களுக்கான போக்சோ சட்டம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சியினை மாவட்ட கலெக்டர் மகாபாரதி குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:
பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே பாதுகாப்பாக இருக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இதை பெண், ஆண் குழந்தைகள் என இருவருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். நமது மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகம் செயல்பட்டு கொண்டிருக்கின்றது. குழந்தைகளுக்கு எதிராக ஏதேனும் குற்றங்கள் நடக்காமல் இருக்க காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
திறன் வளர்ப்பு பயிற்சி, தனிநபர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துகிறது. இதன்மூலம், வேலை வாய்ப்புகள், வாழ்க்கைத் திறன், ஒட்டுமொத்த நல்வாழ்வு ஆகியவற்றை மேம்படுத்தலாம். சமுதாயம் நன்றாக இருக்க வேண்டுமென்றால் குழந்தைகளின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும். அவ்வாறு ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பாட்டாலே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். 18 வயதுக்குட்பட்ட இளஞ்சிறார்கள் குற்ற செயல்களில் ஈடுபடும்போது அவர்களை கவனமாக கையாள வேண்டும்.
காவல்துறையினர் குழந்தைகளிடம் விசாரணையில் ஈடுபடும்போது அவர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். குற்ற செயல்களில் ஈடுபட்ட குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் காவல்துறையினர் எடுக்க வேண்டும். காவல்துறையினராகிய நீங்கள் இந்த பயிலரங்கத்தை பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
குழந்தைகளுக்கு சட்ட உதவி வழங்க மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது, அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள் பற்றிய விபரங்களை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். சிறார் நீதிக் குழுமம் (JJB) மற்றும் குழந்தைகள் நலக்குழுவிற்கு (CWC) பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையை பாதுகாத்து ஒப்படைப்பது பற்றிய முழு விபரங்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு குழந்தையை கையகப்படுத்தும் காவல்துறை அலுவலரின் கடமைகள் பற்றிய செய்ய வேண்டிய மற்றும் செய்ய கூடாத செயல்கள் பற்றி தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
திறன் மேம்பாட்டு முயற்சிகள் பெரும்பாலும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. பயிற்சி, பட்டறைகள் மற்றும் கல்வி வளங்களை வழங்குவதன் மூலம், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் தனிநபர்கள் தங்கள் பணிகளைத் தொடர்ந்து மற்றும் திறம்படச் செய்வதற்குத் தேவையான நிபுணத்துவத்தைப் பெற உதவுகின்றன. மக்கள் சரியான அறிவு மற்றும் திறன்களைக் கொண்டிருக்கும்போது. அவர்கள் தங்கள் வேலையில் நிலையான முடிவுகளை அடைய அதிக வாய்ப்புள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்,மாவட்ட எஸ் பி ஸ்டாலின், டிஆர்ஓ உமாமகேஷ்வரி, ஆர்டிஓ விஷ்ணுபிரியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொ) ரேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

