
அரசு தங்கும் விடுதி கட்ட ஏரி தண்ணீரை பயன்படுத்த எதிர்ப்பு வேலூர் அருகே பரபரப்பு
வேலூர் அடுத்த பெருமுகை ஊராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் குப்பம் பகுதியில் 250 படுக்கை வசதியுடன் கூடிய அடுக்குமாடி தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இந்த கட்டிடம் கட்ட அருகில் உள்ள ஏரியில் இருந்து தண்ணீர் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஏரியில் உள்ள தண்ணீர் வெகுவாக குறைந்து வருகிறது.
மேலும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீர் கிணற்றில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது மேலும் அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் முறையாக வினியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் அரசு தங்கும் விடுதி கட்டும் பகுதியில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்துவாச்சாரி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது குறித்து அப்பகுதியில் உள்ள மக்கள் போலீசாரிடம் கூறுகையில் ஏரியில் இருந்து மின் மோட்டர் போட்டு தண்ணீரை உறிஞ்சி கட்டிட பணிக்கு பயன்படுத்துகின்றனர். இதனால் எங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. டெண்டர் எடுத்தவர்கள் முறையாக போர்வெல் அமைத்து பணியை செய்ய வேண்டும் ஆனால் இப்படி பொதுமக்கள் பயன்படுத்தும் ஏரியிலிருந்து தண்ணீரை எடுக்கிறார்கள். உடனடியாக மின் மோட்டரை அகற்றி தண்ணீர் எடுப்பதை தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து போலீசார் ஒப்பந்ததாரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசி உடனடியாக ஏரியில் இருந்த மின் மோட்டரை அகற்றினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.