செய்தி முன்னோட்டம்
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பிரபலமான ஜிம் கார்பெட் புலிகள் காப்பகத்தில், வன விலங்குகளைப் பாதுகாக்க கேமரா பொறிகள், ட்ரோன்கள் மற்றும் ஒலிப்பதிவுகள் பொருத்தப்பட்டிருந்தது.
இருப்பினும், அவை அதற்கான உண்மையான தேவையை தாண்டி தவறான வழிக்கு பயன்படுத்தப்படுகிறது என சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
உள்ளூர் அதிகாரிகள் மற்றும் கிராம ஆண்களால், வளங்களை சேகரிக்கவும் மற்றும் ஓய்வுக்காகவும் காட்டிற்குச் செல்லும் பெண்களை, அவர்கள் அறியாமலேயே குறிவைத்து இந்த கேமராக்கள் பயன்படுத்தியதாகக் கண்டறிந்துள்ளனர்.
இந்த பெண்கள் பெரும்பாலும் ஜிம் கார்பெட் புலிகள் காப்பகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்த ஆய்வு பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
வனத்திற்குள் பெண்கள்
வனத்திற்குள் பெண்கள் சுள்ளிகளை, கட்டைகளை பொறுக்க செல்வதாக கூறுகின்றனர்
வனத்திற்குள் சுள்ளி சேகரிப்பது சட்டப்படி குற்றமில்லை என்றாலும், வனப் பாதுகாவலர்கள் பெண்களைக் காடுகளுக்குள் இருந்து விரட்ட பறக்கும் ட்ரோன்களை பயன்படுத்துகிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது.
வீட்டில் கழிவறை இல்லாத பெண்கள் சிலரும் காட்டிற்குள் செல்வது வழக்கம். அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பெண்ணை படம் பிடித்த கேமராவின் வீடியோ அதன் பின்னர் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்டது எனவும் ஆய்வறிக்கை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இந்த கேமரா பதிவுகள் எதுவுமே பெண்களின் முன் அனுமதியின்றி எடுக்கப்படுவதால், பல நேரங்களில் அவை தவறாக பயன்படுத்தக்கூடும் எனவும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
கேமரா பொறிகளை தவறாக பயன்படுத்தியதால் கோபமடைந்த கிராமவாசிகளில் ஒரு பகுதியினர், சில சமயங்களில் அவற்றை எரித்த சம்பவங்களும் நடந்தேறியுள்ளன.