
மானாமதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். 22 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2 வருடங்களாக இப்பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் சிலர் மற்ற ஆசிரியர்களோடும், தலைமை ஆசிரியரோடும் ஜாதி ரீதியிலும், ஈகோ பிரச்னையிலும் மோதல் போக்கை கையாண்டு வருவதால் தற்போது மாணவர்கள் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது.
கடந்த மாதம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மாணவர்களை முட்டி போட வைத்ததை சில ஆசிரியர்கள் வீடியோ எடுத்து பரப்பியது, மாணவி ஒருவரை ஆடையை சரி செய்ய கூறிய ஆசிரியரை குற்றம் சாட்டியது, மற்ற ஆசிரியர்களை பற்றி தவறாக எழுதும்படி மாணவர்களிடம் சில ஆசிரியர்கள் கூறியது என அடுத்தடுத்து பல சர்ச்சைகள் எழுந்தன.
மேலும் ஆசிரியர்களின் டூவீலர்களை பஞ்சர் ஆக்குவது, சீட்டைக் கிழிப்பது போன்ற செயல்களும் நடந்தன. இதுகுறித்து தாசில்தார் கிருஷ்ணகுமார், துணை தாசில்தார் சரவணகுமார், கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தினர்.
மாணவர்களை ஒழுக்ககேடான செயல்களில் ஈடுபடுத்தியது, உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை மதிக்காதது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் கணித ஆசிரியர்கள் ராஜா, சாத்தையா இருவரையும் சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.