
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூரில் இளம் வழக்கறிஞர் கண்ணன் (30) மீது மர்ம நபர் ஒருவரால் நடத்திய வன்முறைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணன், பிரபல வழக்கறிஞர் சத்யநாராயணனிடம் பயிற்சி பெறும் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இன்று, ஓசூர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜராகி வெளியில் வந்த போது, மர்ம நபர் ஒருவர் அவரை சரமாரியாக வெட்ட முயன்றார்.
பயத்தில் தப்பியோடிய கண்ணனை, அந்த நபர் ஓட ஓட விரட்டி காயப்படுத்தினார். உடலில் பலத்த காயங்களுடன், கண்ணன் சம்பவ இடத்திலேயே நிலைதடுமாறினார். அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, ஆவசர சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தற்போது கண்ணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தை அடுத்து, மர்ம நபர் தனது காரியத்தை முடித்தவுடன் அருகிலிருந்த ஜெ.எம். 2 நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இச்சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி, முன்விரோதம் காரணமா அல்லது இது கூலிப்படையின் செயலா என்ற கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கறிஞர்களிடையே பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் சட்டத் துறையிலும் பொதுமக்களிடமும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

