
பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டும் என்கிற முதன்மைக் கோரிக்கைக்காகத் தமிழக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண் 309 இல் ‘அரசு ஊழியர், ஆசிரியர்களுக்குப் புதிய ஓய்வூதியம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்’ எனத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியம் கொண்டுவரப் பரிசீலிக்கப்படும் என்றோ கமிட்டி அமைக்கப்படும் என்றோ அதில் சொல்லவில்லை. ஆனால், தற்போது இவ்விஷயத்தில் திமுக அரசு ஏன் இவ்வளவு தடுமாறுகிறது எனத் தெரியவில்லை.
சாத்தியம் உண்டு: உண்மையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதில் தமிழக அரசுக்குப் பெரிய சிரமம் ஒன்றும் இல்லை. இப்போது பணியில் இருக்கும் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களில் 2.29 லட்சம் பேர் பழைய ஓய்வூதியத் திட்டத்திலும், 6.14 லட்சம் பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்திலும் உள்ளனர்.
ஊழியர்களின் தொகை ரூ.73,974 கோடியை ஆயுள் காப்பீட்டு ஓய்வூதிய நிதியில் அரசு சேமித்து வைத்துள்ளது. இதில் பாதித் தொகையான ரூ.37,000 கோடியை அரசு ஓய்வூதிய நிதியமாக வைத்துக்கொண்டு, ஓய்வு பெறுவோரின் ஓய்வூதியச் செலவை அதன் வட்டியிலிருந்து ஈடுகட்டலாம். 7% வட்டி என்றால், ரூ.2,590 கோடி கிடைக்கும். மீதி ரூ.37,000 கோடியை அவரவர் வருங்கால வைப்பு நிதியில் செலுத்த வேண்டும்.
இன்றைய நிலவரப்படி, ஏற்கெனவே ஓய்வு பெற்றுப் பழைய ஓய்வூதியம் பெறுவோர் 6.97 லட்சம் பேர். இவர்களுக்கான ஓய்வூதியச் செலவு 2024-25இல் ரூ.37,663 கோடி. இது அரசின் மொத்தச் செலவான ரூ.3.48 லட்சம் கோடியில் 10 சதவீதம்தான். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்களில் 7,738 பேர் 2023-24இல் ஓய்வுபெற்றுவிட்டனர். சராசரியாக 8,000 பேர் ஓய்வு பெறுவர் என்றால், பழைய ஓய்வூதியதாரர்களில் இது ஒரு சதவீதம்தான். ஓய்வூதியச் செலவான ரூ.37,763 கோடியிலும் இது ஒரு சதவீதம்தான்.