செய்தி முன்னோட்டம்
பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது.
இந்த இமாலய வெற்றியின் மூலம், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தியா தற்போது 15 போட்டிகளில் 9 வெற்றி, 5 தோல்வி மற்றும் 1 டிராவை பெற்றுள்ளது. இதன் மூலம் 61.11 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இந்திய அணியிடம் பெற்ற தோல்வியின் மூலம் இரண்டாவது இடத்திற்கு பின்தங்கியுள்ள ஆஸ்திரேலியா 12 போட்டிகளில் 8 வெற்றி, 3 தோல்வி மற்றும் 1 டிராவுடன் 57.69 ரேட்டிங் புள்ளிகளைக் கொண்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவதற்கான வாய்ப்பு
இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் இன்னும் நான்கு போட்டிகள் எஞ்சியுள்ளன.
இந்நிலையில், மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை சார்ந்து இல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற, இந்தியா இன்னும் மூன்று போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் மற்றும் ஒரு போட்டியை குறைந்தபட்சம் டிரா செய்ய வேண்டும்.
இது நடக்காவிடில் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை சார்ந்து இருக்கும் நிலை ஏற்படும். மறுபுறம், ஆஸ்திரேலியாவுக்கு இன்னும் ஆறு போட்டிகள் மீதமுள்ள நிலையில், ஐந்தில் வெற்றி பெற வேண்டும்.
தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபியில் இன்னும் நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் இலங்கைக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியா வசம் உள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா முதல் இரண்டு இடங்களில் உள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி இந்த பட்டியலில் 55.56 ரேட்டிங் புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
நான்காவது இடத்தில் நியூசிலாந்து 54.55 ரேட்டிங் புள்ளிகளுடனும், ஐந்தாவது இடத்தில் தென்னாப்பிரிக்கா 54.17 ரேட்டிங் புள்ளிகளுடனும் உள்ளன.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான போட்டியின் வெற்றி தோல்வி அடிப்படையில், இந்த அணிகளுக்கும் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு இன்னும் கைவசம் உள்ளது.
ஆறாவது இடத்தில் இங்கிலாந்தும், ஏழாவது இடத்தில் பாகிஸ்தானும், எட்டாவது இடத்தில் வங்கதேசமும், ஒன்பதாவது மற்றும் கடைசி இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் உள்ளன.