பூர்வ குடிகளாக 100 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை காக்கா தோப்பு பகுதியில் வசித்து வரும் தங்களது வீடுகளுக்கு அனைத்து வரிகளும் கட்டிய நிலையில், ஆக்கிரமிப்பு இடம் எனக்கூறி மாநகராட்சி அதிகாரிகள் இடித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
மாநகராட்சி இடங்களில் வீடு இருப்பதாக கூறி சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு என்கிற பெயரில் வீடுகள் இடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை பிராட்வே அருகே உள்ள காக்கா தோப்பு பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை ஆக்கிரமிப்பு இடம் என்று கூறி மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த 120 ஆண்டுகளாக இதே பகுதியில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்களிடம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வீடுகளை இடித்து வருவதால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மாநகராட்சி இடத்தில் இருக்கும் இந்த வீடுகளை இடிக்க நீதிமன்றம் 6 வார கால அவகாசம் கொடுத்த நிலையில், தீர்ப்பினை மீறி இரண்டே நாட்களில் வீடுகளை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் முயல்வதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
மேலும், குடிநீர் வரி, மின்சார வரி, சொத்து வரி என அனைத்தையும் கட்டிய நிலையிலும் பல ஆண்டுகளாக பட்டா வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்ததாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.