செய்தி முன்னோட்டம்
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக ‘பெங்கல்’ புயல் உருவாவதில் தாமதம் ஏற்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அப்படி தாமதமாக உருவாகும் புயல், வரும் நவம்பர் 30ம் தேதி காலை, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில்,”தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, முன்பே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது, நாகப்பட்டினத்துக்கு தென் கிழக்கில் 370 கி.மீ. மற்றும் சென்னைக்கு தெற்கே 550 கி.மீ. தொலைவிலுள்ளதுடன், வட கடலோர மாவட்டங்களை நோக்கி நகரக்கூடும்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் உருவாவதில் தாமதம்; 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
அறிக்கைப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக நிலை கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் அது புயலாக மாற வாய்ப்பு உள்ளது. புயல் உருவாகி கரையை நெருங்கும்போது, அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பெங்கல்’ புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 50-70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும்.
அதேபோல சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்